வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
நல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தனது செல்போனில் வீடியோ படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தன்னிடம் பேசாமல் இருந்தால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது வீட்டில் கூறவே, சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சுரேஷை சுற்றி வளைத்து செல்போனை பறித்துள்ளனர். அப்போது சுரேஷின் சமூகத்தை சேர்ந்தவர்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த போலீசார், சிறுமியை மிரட்டிய வழக்கில் சுரேஷை கைது செய்தனர். இதனிடையே, மிரட்டல் விடுத நபரும், சிறுமியும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சமூக மோதல் ஏற்படுவதை தடுக்க நல்லூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story