7 வருடங்களில் 3 பெண்களுடன் திருமணம் - கல்யாண மன்னனை கைது செய்த போலீஸ்

கரூரில் அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.
7 வருடங்களில் 3 பெண்களுடன் திருமணம் - கல்யாண மன்னனை கைது செய்த போலீஸ்
x
கரூரில் அடுத்தடுத்து 3 பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர். 

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. தனியார் வங்கி ஊழியர். இவருக்கு 2012ல் பொள்ளாச்சியை சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ஜோதி முருகேஸ்வரி. 

பிரசவம் முடிந்த பிறகு கணவன் வீட்டுக்கு வந்த ஜோதி முருகேஸ்வரிக்கு பாலசுப்ரமணியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே சண்டையும், சச்சரவுமாகவே இருந்துள்ளது. இதனால் 2015ல் ஜோதி முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அதன்பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஜோதி முருகேஸ்வரி, தன்னிடம் இருந்து கணவர் பறித்துக் கொண்ட நகைகளை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார்.

மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு பதிலாக தன்னுடன் வங்கியில் வேலை பார்த்த நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் புது மாப்பிள்ளையானார் பாலசுப்ரமணியன். இந்த திருமணத்திற்கு பாலசுப்ரமணியனின் பெற்றோர், சகோதரிகள் என அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர். 

இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் நித்யாவின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு 2020ல் ​வேறொரு பெண்ணை 3வதாக திருமணம் செய்துள்ளார் இந்த கல்யாண மன்னன். இந்த பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விவாகரத்துக்கு விண்ணப்பித்த முதல் மனைவி காலம் கடந்தும் அல்லாடி கொண்டிருந்த நிலையில் என்ன தான் நடக்கிறது? என விசாரித்த போது தான் கணவரின் அத்தனை சேட்டைகளும் தெரியவந்தது. உடனே போலீசில் புகார் அளித்தார் முதல் மனைவி. 

இந்த விவகாரம் வெளியான உடனே 3வதாக திருமணம் செய்து கொண்ட சுதா, பாலசுப்ரமணியனை விட்டு பிரிந்துள்ளார். அப்போதும் கூட தன் கணவரை பிரிய முடியாமல் கூடவே இருந்த நித்யா விசாரணை வளையத்திற்குள் வந்தார். 

முதல் மனைவியிடம் பாலசுப்ரமணியன் செய்த பண மோசடிக்கெல்லாம் நித்யாவும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற புகார் எழுந்திருக்கும் நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

7 வருடத்தில் 3 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பாலசுப்ரமணியன் இப்போது குளித்தலை கிளைச்சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்...  


Next Story

மேலும் செய்திகள்