வாகன சோதனை என்ற பெயரில் மோசடி - ரூ.10 லட்சம் பணம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்

வாகன சோதனை என்ற பெயரில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த புகாரில், பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
வாகன சோதனை என்ற பெயரில் மோசடி - ரூ.10 லட்சம் பணம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்
x

வியாபாரியிடம் பணம் பறித்தது அம்பலம் 
பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவு 
மதுரையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு 

வாகன சோதனை என்ற பெயரில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த புகாரில், பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்... 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இந்திராநகரை சேர்ந்தவர் அர்ஷத். டெய்லரான இவர் கடந்த 5ஆம் தேதி தன் நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வாங்க சகோதருடன் காரில் தேனிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் 10 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். 

அப்போது 5 லட்ச ரூபாய் பணம் கூடுதலாக தேவையாக இருந்ததால் திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்க அணுகி உள்ளனர். அவரும் பணத்தை தருவதாக கூறவே, அர்ஷத்தும் அவரது சகோதரரும் மதுரைக்கு சென்றுள்ளனர். 

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே பணத்தை பெறுவதற்காக காத்திருந்த போது பாண்டி மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பவர் வந்துள்ளனர். அதேநேரம் உக்கிரபாண்டி என்ற முதியவர் வட்டிக்கு பணத்தை தருவதற்கான ஆவணத்தை எடுத்து வருவதாகவும் காத்திருக்குமாறும் கூறியுள்ளனர். 

அப்போது அர்ஷத் தன் சகோதருடன் காரில் காத்திருந்த போது திடீரென அங்கு காவல் துறை வாகனம் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய நாகமலை புதுக்கோட்டை காவல் பெண் ஆய்வாளரான வசந்தி, காரில் இருந்த அர்ஷத்தை விசாரித்துள்ளார். 

அவர்களை சோதனை செய்த  போது அவர்கள் வசம் இருந்த 10 லட்ச ரூபாய் பணம் குறித்து  கேள்வி எழுந்தது. தங்கள் தொழிலுக்காக கொண்டு வந்த பணம் என்று கூறியபோதிலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அவர், அந்த பணம் ஹவாலா பணம் என கூறி பறிமுதல் செய்துள்ளார்.. 

தன்னுடைய பணம் தான் என அர்ஷத் சொன்ன போதும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல்,  தங்க கடத்தல், கஞ்சா வழக்கு போட்டு விடுவேன் என கூறி மிரட்டியிருக்கிறார் வசந்தி.. பின்னர் அங்கே இருந்த கார்த்திக், பாண்டி ஆகியோரை காரில் ஏற்றிச் சென்றுள்ளார். உரிய ஆவணத்தை கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள் என்றும் கூறி விட்டு பணத்துடன் கிளம்பினார் வசந்தி. 

உரிய ஆவணத்துடன் அர்ஷத் சென்ற போதிலும் பணத்தை தருவதாக கூறிய வசந்தி அலைக்கழிக்கவே, கடைசியில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார் அர்ஷத். 

அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில், பணம் தருவதாக கூறிய பாண்டி, கார்த்திக், உக்கிரபாண்டிய ஆகியோர் காவல் ஆய்வாளர் வசந்தியை வைத்து பணம் பறித்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸ் என்பதால் தப்பித்துவிடலாம் என நினைத்து அவரை வைத்து இந்த கும்பல் பணம் பறித்ததும் உறுதியானது. 

குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்தி, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவரை தாக்கியதாக வழக்கு ஒன்று இவர் மீது ஏற்கனவே  நிலுவையில் உள்ளது 

இவருடன் சேர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்ட பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் போலீசார், பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்