அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் கைது
x
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா கடையம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். 47 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் மூலம் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் அக்காள் மகன் ரமேஷ் பாபு.அரசுப் பணியில் சேர விரும்பினால் அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், இதற்காக ஒரு தொகையை கொடுத்தால் நிச்சயம் வேலை என்றும் ரமேஷ் பாபு கூறியுள்ளார். தன்னுடைய சித்தி அமைச்சர் என்பதால் சமூக நலத்துறையில் வேலை கட்டாயம் கிடைக்கும் என்றும் பாக்யராஜிடம் குணசேகரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனை நம்பி கடந்த 2018-ஆம் ஆண்டு குணசேகரன் தனது உறவினர் மற்றும் தெரிந்த 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகிய அரசு வேலைகளுக்காக ரமேஷ்பாபுவை அணுகியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவின் வங்கி கணக்கு, அவரின் மனைவி சூரிய வர்ஷினி மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்கில் 35 லட்ச ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார் குணசேகரன்.பணத்தை பெற்ற ரமேஷ்பாபு  கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த குணசேகரன் தன் பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்கவே ஆத்திரமடைந்த ரமேஷ் பாபு, குணசேகரன் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து குணசேகரன், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.அதன்பேரில் ரமேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகார் அனைத்தும் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து  தனிப்படை போலீசார், ரமேஷ்பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்