தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம் - ஊரடங்கில் கொடிகட்டி பறப்பது எப்படி?

தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்ட போதிலும் கள்ளச்சாராய உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது.
x
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட அதுதொடர்பான செய்திகளுக்கு பஞ்சமே இல்லாத வகையில் தினம் தினம் மதுவிலக்கு போலீசாரின் அதிரடிகளும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

அதிலும் கடந்த 10 நாட்களாக கள்ளச்சாராய உற்பத்தி தொடர்பான செய்திகள் அதிகம் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் காய்ச்சி வைத்திருந்த 150 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். 

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது மதுவிலக்கு போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 110 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர். 

இதனிடையே வாட்ஸ் அப்பில் சரக்கு என்ற பெயரில் குழு உருவாக்கி மதுபானங்களை விற்பனை செய்ததும் வாணியம்பாடியில் நடந்தது. இந்த சம்பவத்திலும் போலீசாரின் நடவடிக்கை துரிதமாக இருந்தது. 

அதேநாளில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மலைக்கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வெளியான தகவலையொட்டி போலீசார் சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு பெரிய சைஸ் ஊறலில் சுமார் 3ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவற்றை அழித்தனர். 

கடந்த வாரம் மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை குடித்த கூலித் தொழிலாளர்களான பிரபு மற்றும் செல்வம் ஆகியோர் பலியான நிலையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கள்ளச்சாராய வேட்டை நடந்தது. அப்போது அந்த பகுதிகளிலும் ஏராளமான சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் என்றால் வீட்டிலேயே சாராயத்தை காய்ச்சும் கும்பலின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. யூ ட்யூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சி வரும் கும்பலையும் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். குக்கரில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகனை கரூர் போலீசார் கைது செய்த நிலையில் அடுத்த நாளே மீண்டும் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இப்படியாக தினம் தினம் கள்ளச்சாராயம் தொடர்பான செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இது ஊரடங்கில் மட்டும் தான் நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திடீரென ஊரடங்கு காலத்தில் மட்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் வெளியாவது எப்படி? அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தாலும் கூட மற்ற நாட்களிலும் இதனை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்