வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் - திருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
x
தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதேபோல், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம் தான் என கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்தது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இது குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறித்தினர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள், அரசின் விதிமுறைகளை அதிகாரிகளும், காவல் துறையினரும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்