சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமி - மக்கள் மனம் கவர்ந்த மலை ரயில்

உதகைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மலை ரயில் பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமி - மக்கள் மனம் கவர்ந்த மலை ரயில்
x
மலைகளின் அரசி...சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமி என்று சுற்றுலாத் தலங்களுக்கு மகுடமாக விளங்குவது உதகை மண்டலம்...இவ்வாறு மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நீலகிரி மாவட்டம் உதகைக்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு ரயில் பாதை அமைக்க 1854 ஆம் ஆண்டில் இருந்து பல திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு காரணங்களால் எதுவும் நிறைவேறாமல் இருந்தது. இதையடுத்து சுவிஸ் பொறியாளரான என். ரிக்கன்பாக் என்பவரால் திட்டமிடப்பட்ட   பல் சக்கர ரயில் அமைப்புத் திட்டமும் பொருளாதார சிக்கல்களால் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் மதராஸ் ரயில்வே கம்பெனியானது 1873 ஆம் ஆண்டு,  முதல்கட்டமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் இடையிலான 26 மைல் தூரம் கொண்ட ரயில் பாதையை திறந்தது. பின்னர், 1891ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நீலகிரி ரயில் பாதை, பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து இறுதியாக  1899 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது. 130 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த நீலகிரி மலை இரயிலை கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில்  பயணம் செய்து மலைப்பாதையில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.இந்த நிலையில்கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை மலை ரெயில் சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்ய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சில ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் மலை ரயில் தனியார் நிறுவனத்திற்கு வாடகை விடப்பட்டு, அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனை ரயில்வே நிர்வாகம் மறுத்த நிலையில், ஏற்கனவே உள்ளது போல் மீண்டும் மலை ரயிலை இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த  டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல் சாதாரண பயணிகள் ரயில் சேவைக்கு பதிலாக முன் பதிவுடன் கூடிய சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது.இதையடுத்து, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.நூற்றாண்டு கால பழமை வாய்ந்த  மலை ரெயிலின் பாரம்பரியத்தையும் சிறப்புகளையும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நீலகிரி மலை ரயில்வே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு,ஆங்கிலேயர் காலத்தில் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்,அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.மொத்தத்தில் கண்களைக் கவரும் இயற்கைக் காட்சிகள், பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள், சுற்றுலாப்பயணிகளின் ஆரவாரம்,  என ஒரு நாள் முழுவதும் தங்களை மறந்து மகிழ்ச்சி அடையச் செய்கிறது இந்த மலை ரெயில் பயணம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...


தந்தி டிவி செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் சண்முகம்.....


Next Story

மேலும் செய்திகள்