இளைஞரின் செயலை கண்டித்த திருநங்கைக்கு நேர்ந்த கதி - திருநங்கையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தனக்கு வேலை கொடுத்த திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கடைசியில் அவரையே கொடூரமாக கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
இளைஞரின் செயலை கண்டித்த திருநங்கைக்கு நேர்ந்த கதி - திருநங்கையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்
x
கோவையில் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக களத்தில் நின்று செயல்பட்ட திருநங்கையான சங்கீதா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அழுகிய நிலையில் பிளாஸ்டிக் டிரம்மில் கிடந்த சங்கீதாவின் சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 
திருநங்கைகளை வைத்து முதல் முறையாக சமீபத்தில் உணவகம் ஒன்றை தொடங்கிய சங்கீதா பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இதனால் ஏற்பட்ட தொழில் போட்டியில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ​சந்தேகம் எழுந்தது. இதனிடையே, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் சோதனையிட்டபோது அதில் சங்கீதா இளைஞர் ஒருவருடன் செல்லும் காட்சிகள் இருந்தது. யார் அவர்? என விசாரித்த போது தான் சங்கீதா நடத்திய உணவகத்தில் வேலை பார்த்த இளைஞர் ராஜேஷ் என்பது தெரியவந்தது. நாகையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையாளி அவர் தான் என உறுதியானது. ஐடிஐ முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த ராஜேஷ், சங்கீதாவின் உணவகம் தொடர்பான விளம்பரத்தை பார்த்துவிட்டு தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் உணவகத்தில் ராஜேஷை வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார் சங்கீதா. ஆனால் தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பார்ப்பது போல, தனக்கு வேலை கொடுத்த சங்கீதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் ராஜேஷ். 60 வயதான தன்னிடம் ராஜேஷ் இதுபோல் நடந்து கொண்டதால் ஆத்திரமடைந்த சங்கீதா அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருந்தபோதிலும் ராஜேஷின் சேட்டை தொடரவே, ஒரு கட்டத்தில் போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரித்துள்ளார். மேலும் வேலையை விட்டு செல்லுமாறும் சங்கீதா கூறியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ், அவரை பின்தொடர்ந்து சென்று கொலை செய்துள்ளார். பின்னர் தண்ணீர் பிடிக்கும் டிரம்மில் அவரது உடலை வைத்துவிட்டு துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக உப்பை அள்ளிக் கொட்டிவிட்டு சென்றுள்ளார். சங்கீதாவின் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று புதிதாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொண்டு தன்  சொந்த ஊருக்கு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் ராஜேஷ். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லைகளில் திருநங்கைகள் சிக்கி விடக் கூடாது என்பதை எண்ணமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு மூத்த திருநங்கை, அதே மாதிரியான பிரச்சினையில் சிக்கி தன் உயிரை விட்டிருப்பது கோவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்