செல்போன் கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தில் முகாமா? - கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்று செல்போன்கள் கொள்ளை

ஒசூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போனை கொள்ளையடித்துச் சென்ற கும்பல், மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ளதா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
செல்போன் கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தில் முகாமா? - கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்று செல்போன்கள் கொள்ளை
x
சென்னை காஞ்சிபுரம் அருகே பூந்தமல்லி பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட செல்போன்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. 15 அட்டை பெட்டிகளில் 13 ஆயிரத்து 920 எண்ணிக்கை கொண்ட உயர் ரக செல்போன்களை ஏற்றிக் கொண்டு கிளம்பியது இந்த கண்டெய்னர் லாரி. இந்த வாகனத்தை  சதீஷ்குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் ஓட்டிச் சென்றனர். லாரியில் இருந்த செல்போன்களின் மதிப்பு மட்டும் சுமார் 10 கோடி இருக்கும் என கூறப்பட்டது. சென்னையில் இருந்து கிளம்பிய லாரி ஒசூர் அருகே சென்ற போது திடீரென லாரி மற்றும் கார்களில் வந்த கும்பல் கண்டெய்னர் லாரியை வழிமறித்துள்ளது. கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர்கள் 2 பேரையும் அந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டி தாக்கி கைகளை கட்டி புதரில் வீசிவிட்டு பின்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளது. கடத்தப்பட்ட லாரியை அலகுபாவி என்ற இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அதில் இருந்த செல்போன்களை எல்லாம் அந்த கும்பல் தங்கள் லாரியில் வைத்து கடத்திச் சென்றது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொள்ளை கும்பலை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மத்தியபிரதேச மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தை சேர்ந்த அங்கித்ஜான்ஜா கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆந்திராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே பாணியில் செல்போன் கொள்ளை சம்பவம் நடந்தது. ஒரு வேளை அந்த கும்பலுக்கும் இப்போது கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 9 தனிப்படைகளில் 45 போலீசார் உள்ளனர். தெலுங்கு, கன்னடம், மகாராஷ்டிரம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் தெரிந்த போலீசார் இந்த குழுவில் உள்ளதால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடிப்பது எளிதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்