சென்னை மாநகராட்சிக்கு எதிரான மனு- வாபஸ் பெற ரஜினி முடிவு
திருமண மண்டப சொத்து வரி மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில், நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசை, எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி குறைப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக ரஜினி தரப்புக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நினைவூட்டல் கடிதங்கள் அனுப்புவதை விடுத்து வழக்கு தொடர்ந்ததற்காக அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதி எச்சரித்ததை தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெறப் போவதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வாபஸ் பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய ரஜினி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Next Story
