முறையற்ற உறவில் பிறந்த குழந்தை உயிருடன் எரித்துக் கொலை

தென்காசி அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முறையற்ற உறவில் பிறந்த குழந்தை உயிருடன் எரித்துக் கொலை
x
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சண்முகவேல். இவரின் 22 வயதான மகள் சங்கரகோமதி அந்த பகுதியில் உள்ள காலணி கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சங்கர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அவருடன் நெருங்கிப் பழகியதில் சங்கரகோமதி கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ள சொல்லி சங்கரகோமதி வற்புறுத்திய போதிலும், ஏமாற்றும் எண்ணத்தில் இருந்த சங்கர், திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்து போனார் சங்கரகோமதி. குழந்தையை கலைக்க இயலாத சூழல் ஏற்படவே, வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினார் அவர். 

இதனிடையே சங்கரகோமதிக்கு பிரசவ வலி ஏற்படவே நள்ளிரவில் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையின் அழுகுரல் அக்கம் பக்கம் கேட்காமல் இருப்பதற்காக அவரது உறவினர்கள் குழந்தையின் வாயை பொத்தியே வைத்துள்ளனர். 

பிரசவமான சங்கரகோமதிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே உடனே அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அங்குள்ள தியேட்டர் வளாகம் ஒன்றில் எரிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. குழந்தையை எரித்துக் கொன்றது யார்? என விசாரணை நடந்த நிலையில் தான் அரசு மருத்துவமனையில் இருந்த சங்கரகோமதி மீது சந்தேகம் எழுந்தது. இதனை உறுதி செய்தது மோப்பநாய் டைகர். குழந்தை சடலத்தை சுற்றி வந்த மோப்பநாய் டைகர், நேராக சங்கரகோமதி வீட்டுக்கு செல்லவே போலீசாரின் சந்தேகமும் உறுதியானது. 

அப்போது அவரது உறவினர்களை பிடித்து விசாரித்த போது தான் குழந்தையை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டனர். காதலன் ஏமாற்றியதால் குழந்தை பெற்ற அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி குழந்தையை கொன்றதாக தெரியவந்துள்ளது. 

ஆனால் குழந்தையை அவர்கள் கொன்ற விதம் தான் பதற வைக்கிறது. தாய்ப்பால் கூட குடித்திராத அந்த பச்சிளம் குழந்தையை ஒரு துணியில் சுற்றி உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறது அவர்களின் குடும்பம். இந்த கொடூரத்தை செய்தது அந்த பிஞ்சுக் குழந்தையின் பாட்டியான இந்திரா. 

நடந்த சம்பவங்கள் அனைத்தும் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து குழந்தையின் பாட்டி இந்திராவை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் உள்ள சங்கரகோமதி விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சங்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

தாயின் ஸ்பரிசத்தை கூட உணராத அந்த பச்சிளம் சிசு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்