சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டள்ளன. இந்நிலையில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மே மாதத்திற்கான உணவுப் பொருட்களை வழங்க சமூகநலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன் வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய வேளையில் சத்துணவு வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா காரணமாக மார்ச் மாதம் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு , பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. உலர் உணவுப் பொருட்களையோ அல்லது அதற்கு ஈடான பணத்தையோ மாணவர்களுக்கு வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சத்துணவு சாப்பிடக்கூடிய 42.61 லட்சம்  குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்களை அந்தந்த பள்ளிகளில் வழங்குவதற்கு சமூக நலத்துறை செயலாளர் மதுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரு மாணவருக்கு ஒரு மாதத்திற்கு செலவாகும் உணவுப்பொருட்களை கணக்கிட்டு, அரிசி, பருப்பு, மூக்கடலை மற்றும் பச்சைப் பயிறு போன்ற பொருட்களை அந்தந்த பள்ளிகளில் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள்  தலைமையில் குழு அமைத்து இந்த பொருட்களை விநியோகம் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்