தமிழகம் முழுவதும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்

மாசிமகத்தை முன்னிட்டு தமிழக கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்
x
நெல்லையப்பர் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலம்

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் உள்ள பொற்றாமரைத் குளத்தில் தெப்பதேரில் அப்பர் பெருமான் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சிக் கொடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

மாசிமக  தெப்ப உற்சவம் கோலாகலம்

மாமல்லபுரத்தில் மாசிமகத்தை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கோயிலில் இருந்து, வீதி உலா புறப்பட்ட தலசயன பெருமாள் புஷ்கரணி தெப்பக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் குளத்தின் படிகட்டுகளில் நின்று கற்பூர ஆராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். 

மாசிமகத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா கோலாகலம்

சிவகங்கை காசி விஸ்வநாத சுவாமி கோயில் அருகே தெப்பக்குளத்தில் மாசிமக தெப்பத் திருவிழா நடைபெற்றது. சிவன் கோயிலில் இருந்து புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து,  தெப்பக்குளத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர் உற்சவர் கங்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டன. இதையடுத்து தெப்பக்குளத்தை சுற்றி நின்று ஏராளமான பெண்கள் அகல்விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மாத உற்சவம் கோலாகலம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மாத உற்சவம் களைகட்டியது. இதை முன்னிட்டு ராமர், ஸ்ரீதேவி-பூதேவி உடன் மாடவீதியில் உலா வந்ததுடன், கோயில் குளத்தில் இறங்கி ஐந்து முறை தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு கற்பூர ஆராதனை காண்பித்து கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.Next Story

மேலும் செய்திகள்