இயக்குநர் ஆசையில் வந்தவர் மனநோயாளி ஆன பரிதாபம் - இளைஞரை மீட்க கைகொடுத்த சமூக வலைத்தளங்கள்
இயக்குநர் ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்த ஒருவர் சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் அளவிற்கு மனநோயாளி ஆன சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சினிமா என்ற ஒரு மாயத்திரை சிலருக்கு வண்ணமயமான உலகத்தையும், பலருக்கு கருப்பு முகத்தையும் காட்டுகிறது.. சினிமாவில் இயக்குநராக சாதிக்க வேண்டும் என கிளம்பி வந்த ஒருவர் மனநோயாளி ஆன சோகமே அதற்கு சாட்சி...
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட செய்தி என்றால் சென்னை வடபழனியில் சாலையோரம் இருக்கும் இவரைப் பற்றி தான்... இயக்குநர் ஆகும் ஆசையில் வந்த ஒருவர் சாலையோரம் கேட்பாரற்று கிடக்கிறார் என கூறி அவரின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது...
இந்த செய்தி பலருக்கும் பகிரப்படவே அவரைத் தேடி சென்றவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. கிழிந்த உடைகள், சிக்கு பிடித்த தலைமுடி, அழுக்கேறிய உடல் என அலங்கோலமாக காட்சி தந்த அந்த நபர் நடிகர் குணால், மோனல் நடிப்பில் வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்...
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இவரின் பெயர் குருநாதன். ஒரு படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர், அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி சென்ற போது எல்லா பக்கமும் பாராமுகம் காட்டவே என்ன செய்வதென தெரியாது திகைத்துப் போயிருக்கிறார்.
அன்றாட உணவுக்கு வழியின்றி இருக்க இடமின்றி தவித்த அவருக்கு கடைசியில் கைகொடுத்திருக்கிறது பிளாட்பார்ம். சாலையோரத்தில் தஞ்சம், கிடைத்தால் தான் உணவு , இல்லாவிட்டால் பசி தான் என இத்தனை நாட்களும் கடந்திருக்கிறது அவருக்கு.
ஆனால் என்ன நடந்தாலும் எழுதுவதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை. எங்கிருந்தோ பேனாவையும் பேப்பரையும் வாங்கி வைத்திருந்த அவர், எந்நேரமும் எழுதியபடியே இருந்து வந்துள்ளார்.
இவரை மீட்க சென்றவர்களிடம், தன் கதைகள் திருடப்பட்டதாக கூறியபடியே இருந்துள்ளார். அவரிடம் இருந்த பேப்பர்களை வாங்கி பார்த்த போது கதைகளும், கவிதைகளும் இருந்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது...
சமூக வலைத்தளங்களில் குருநாதனை பற்றி செய்தி வெளியான உடனே அவரை எப்படியும் மீட்க வேண்டும் என களமிறங்கியவர்களில் சரிபாதி சினிமாத்துறையினரே.
இதுபோல் ஆயிரம் குருநாதன்கள் நமக்கு அருகாமையில் கூட இருக்கலாம்... இலக்கை எட்ட முடியாதவர்களில் பலர் இதுபோன்ற நிலைகளுக்கு செல்வதை தடுக்க அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளும், அடைக்கலமும் அவசியம். இதை மனிதாபிமானத்துடன் நாம் அணுகினால் பலரின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து அவர்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கலாம்.
Next Story