குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : என்.ஆர்.சி, என்.பி.ஆரை திரும்பப் பெற கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி, கோவை காந்திபுரம் பகுதியில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அவற்றை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினர்.
நெல்லை

திமுக கூட்டணி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பதாகைகளுடன், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கம்பம் தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை வாபஸ் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல, உத்தமபாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தியபடி, இதில் பங்கேற்ற ஏராளமானோர், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தினர்.
ஆம்பூர்
இதே அமைப்பு சார்பில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
காரைக்கால்

இதேபோல, காரைக்கால் கோவில்பத்து பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தியபடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏந்தியபடி, சிஏஏவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல, மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில், பள்ளி மாணவிகள் பங்கேற்றதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மாணவிகளை கலைந்து செல்லக்கோரி முழக்கமிட்ட அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
Next Story