"முன்னாள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" - தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது"

ஓய்வு பெற்ற பிறகு, அரசு குடியிருப்பில் 15 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் வசித்து வரும் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம் - தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது
x
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் உதவி ஆய்வாளர் மணி, 2004 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.  

இதனையடுத்து குடியிருப்பை காலி செய்து விட்டு, வாடகை பாக்கியை செலுத்தும்படி அறிவுறுத்தி, அவருக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை மேலாளர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

14 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் 15 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் இருப்பதாக தொழிற்பேட்டை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்த போது, மணி ஓய்வு பெற்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என  பரங்கிமலை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு ஓய்வூதிய சட்ட விதிகளின் கீழ், ஓய்வூதியதாரரின் நடத்தை சரியாக இல்லாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,  ஓய்வு பெற்ற பின் வீட்டை காலி செய்யாத மணிக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து சிட்கோ தலைவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்