தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
x
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை முதலே கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வைபவம், கற்பக விநாயகர் கோவில் குளத்தில் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருச்சி மலைக்கோட்டை : 

சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு, 150  கிலோ எடையுள்ள பிரமாண்ட கொழுக்கட்டை படையல் இட்டு, நெய்வேத்தியம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, பிள்ளையார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசித்த பக்தர்களுக்கு, படையல் கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. 

மதுரை :

இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள முக்குறுணி பிள்ளையாருக்கு, 18 படியில் தயாரிக்கப்பட்ட பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொட்டில் போல் கட்டி எடுத்து வந்து, விநாயகர் முன்பு வைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி அளித்த பிள்ளையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. 

கோவை : 

கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயிலில், சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு, விநாயகருக்கு அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பிள்ளையாரை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து, தங்கரத ஊர்வலம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் புலியகுளத்தில் அமைந்துள்ள ஒரே கல்லால் ஆன, பிரமாண்ட முந்தி விநாயகர் கோயிலில், சதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடந்தது. 19 அடி உயரம், 10 அடி அகலம் 190 டன் எடையுள்ள, மிகப் பெரிய சிலைக்கு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தேங்காய், வாழைப்பழம், வெத்தலை பாக்கு மற்றும் முறுக்கு, அதிரசம், மைசூர் பாகு, லட்டு, போண்டா, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்கள் படையலிட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில், அமைக்கப்பட்ட தச அவதார அரங்கில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசிக்கின்றனர். கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல், போன்றவைகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சதுர்த்தி விழாவையொட்டி, கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மதுரவாயல் சந்தை அருகே கருப்பு எள்ளாலான அத்திவரத விநாயகர் சிலை கிடந்த கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு, விநாயகர் நின்ற கோலத்திலும் காட்சி அளிக்க உள்ளார். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பக்தர்கள் விநாயகரை ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். கடல் வாழ் உயிரினங்களுக்கு நன்மை பயக்கும் வகையில், கருப்பு எள்ளால் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்