கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!

இந்தியாவிலேயே முதல்முறையாக கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு சேமிப்பு நிலையத்தால் ஆபத்தும், பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன
x
இந்தியா - ரஷ்யா ஒப்பந்தத்தின்படி, கூடங்குளத்தில் ஏற்கனவே உள்ள இரு அணுஉலைகளை தவிர மேலும், நான்கு அணுஉலைகள் அமைக்கப்பட உள்ளன. கூடுதல் அணுஉலைகள் அமையும் பட்சத்தில், 6000 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையமாக கூடங்குளம் மாறும். 

இதனால் உலைகளில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளும் அதிகரிக்கும். இந்த அணுக்கழிவுகளை சேமிக்கும் அளவிற்கு கூடங்குளத்தில் எந்த நிலையங்களும் இல்லை என்பதே கவலைக்குரிய விஷயமாகும். தற்போது கூடங்குளம் குளத்தில் உள்ள ஏ.ஆர் நிலையத்தில், அணுக்கழிவுகள் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 

4 ஆயிரத்து 328 கொள்கலன்கள் வைக்கும் அளவிலான ஏ.எப்.ஆர் நிலையம் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் முடியவில்லை என்றால், அணுக்கழிவு கொள்கலன்களை ஏ.ஆர் குளத்தில் மிக நெருக்கமாக வைக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. அப்படி வைக்கும் பட்சத்தில் அணுக்கசிவு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டுமே சூடாக இருக்கும் அணுக்கழிவுகளை குளிர்படுத்துவதற்கும், தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கு மட்டுமே பயன்படும் என்றும் கூறப்படுகிறது.   

இதற்கு நிரந்தர தீர்வு, ஆழமான நிலத்தடி களஞ்சியம் என்றழைக்கப்படும் டிஜிஆர் முறை தான் எனவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 
இந்த முறையால், கதிரியக்கம் அதிகம் உள்ள அணுக்கழிவுகள் காலத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இந்த டிஜிஆர் நிலையம், மிகவும் பாதுகாப்பான, நிலநடுக்கம் ஏற்படாத இடத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

அணுக்கழிவுகளுக்கான உலகின் முதல் டிஜிஆர் என்றழைக்கப்படும் ஆழ் நிலத்தடி களஞ்சியம், பின்லாந்து நாட்டில் அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள மூடிய எரிபொருள் சுழற்சி முறை கூட கூடங்குளத்தில் இல்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். அதுமட்டுமில்லை, இந்தியாவில், அழுத்தப்பட்ட கனமான நீர் வகை அணுக்கழிவுகளை பதப்படுத்தும் மையங்கள் மட்டுமே இருப்பதாகவும், கூடங்குளத்தில் செயல்பாட்டில் இருக்கும் அணுஉலைகள், கனமில்லா நீர் வகையை சார்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. எனவே, கூடங்குளம் குளத்தில் புதைக்கப்படும் அணுக்கழிவுகள் பாதுகாப்பாக இருக்கும் வரை கவலை இல்லை என்றாலும், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அதன் விளைவுகள் விவரிக்க முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்