அஞ்சல் துறை தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

அஞ்சல் துறை தேர்வு தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெறும் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அஞ்சல் துறை தேர்வு முடிவுகளை வெளியிட தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
x
நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு  ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கான வினாத்தாள்  மாநில மொழி, இந்தி மற்றும்  ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இருக்கும். இந்நிலையில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால் துறை கடந்த ஜூன் 4-ல் வெளியிட்டது இதற்கான தேர்வுகள் இன்று நடைபெற உள்ளது.இந்நிலையில் மத்திய அரசு ஜூலை 11-ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும், கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இடம்பெறாது எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு  அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை சொக்கிக் குளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  அஞ்சல் துறை இந்த அறிவிப்பால், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள், வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்றும், அஞ்சல் துறை தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதும் வகையில் தேர்விற்கான புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, மகாதேவன் அமர்வு, இன்று அஞ்சல் துறை தேர்வை நடத்தலாம் என்றும், முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்