ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை - சி.வி.சண்முகம்

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான திட்டங்களுக்கு எந்த காலத்திலும் அ.தி.மு.க அரசு அனுமதி அளிக்காது என பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை - சி.வி.சண்முகம்
x
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா,  ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டா பகுதியில் விவசாயம் அடியோடு அழியும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்ததிட்டத்துக்கும் அ.தி.மு.க அரசு அனுமதி வழங்கவில்லை என்றும்  மாநில அரசின் அனுமதியின்றி எண்ணெய் நிறுவனங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறினார். மேலும், அ.தி.மு.க அரசு  அனுமதி வழங்கியது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி அப்பகுதியை போராட்டக் களமாக மாற்றப்படுவதாக அவர் சாடினார்.எரிவாயு திட்டத்துக்கு 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக தான் அனுமதி வழங்கியதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் ஆய்வுக்கான உரிமம் மட்டுமே வழங்கப்பட்டது என்றும் எரிவாயு எடுக்க ஒப்பந்தம் போடவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மடக்கி பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த திட்டத்தை எதிர்க்கும் தி.மு.க ஆய்வுக்கு அனுமதி வழங்கியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், ஆய்வு நடத்த அனுமதி என்பது திட்டத்திற்கான அனுமதி இல்லை என்று கூறினார். அ.தி.மு.க அரசு ஆய்விற்கு கூட அனுமதி வழங்காத போது தி.மு.க மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக என சட்ட அமைச்சர் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு தடுத்தாலும், அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுவதால் போராட்டம் நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்