மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..
x
1970ஆம் ஆண்டு உருவான ஆவடி நகராட்சி, 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. திருமுல்லைவாயில், பட்டாபிராம், முத்தா புதுப்பேட்டை, மிட்டினமல்லி, அண்ணனூர், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள 48 வார்டுகளில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பாதுகாப்பு துறைக்கு சொந்தமான டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை, விமான படை, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய வாகன கிடங்கு, இன்ஜின் பேக்டரி,  மத்திய உணவு கழகம், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், ரெயில்வே தொழிற்சாலை உள்ளிட்டவை ஆவடியில் உள்ளன. ஆவடியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசிக்கின்றனர். ஆவடியில் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் இருந்தது. இதற்கான விரிவாக்க ஆய்வுப் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.  
மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில், மாநகராட்சி ஆகும் பட்சத்தில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், உயர்தர சாலைகள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர முடியும்.புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆவடி மாநகராட்சியில், தற்போதைய நகராட்சியில் உள்ள 48 வார்டுகள் கொண்ட பகுதிகள் மட்டும் அடங்கும். நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதால், ஆவடி மாநகராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்