காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் படி ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்குமா?

கர்நாடக அணைகளில் தற்போதைய நீர் இருப்பு எவ்வளவு என்பது பற்றியும் அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு..
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப் படி ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்குமா?
x
கடந்த ஆண்டு கர்நாடகாவில் பரவலாக மழை பெய்ததால் கர்நாடக அணைகள் எதிர்பார்த்ததைவிட முன்பே நிரம்பியது. இதனால் கர்நாடகாவில் இருந்து குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகமாகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு சுமார் 40 டிஎம்சி. ஆனால் கடந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் 55 டி எம் சி அளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு காரணம். இதனால் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனென்றால் சாதாரண காலங்களில் தென்மேற்குப் பருவமழை மே மாதம் கடைசி வாரத்தில் கேரளாவில் தொடங்கி ஜூன் மாத முதல் வாரத்தில் கர்நாடக கடலோர பகுதியிலும் இரண்டாம் வாரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கேரளாவிலேயே தாமதம் ஆகியுள்ளது. பருவ மழை தாமதத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்தும் குறைவாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 6 புள்ளி ஆறு எட்டு டி.எம்.சி, கபினி அணையில் 2 புள்ளி மூன்று இரண்டு டிஎம்சி, ஹேமாவதி அணையில் 3 புள்ளி நான்கு ஐந்து டி எம் சி மற்றும் ஹாரங்கி அணையில் 1 புள்ளி ஒன்று டி எம் சி என ஒட்டுமொத்தமாக 13 புள்ளி ஐந்து ஆறு டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல அணையின் நீர் வரத்தை பார்த்தால் ஒட்டுமொத்தமாக நான்கு அணைகளும் சேர்த்து 2 ஆயிரத்து 500 கன அடிக்கும் குறைவாகவே உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு படி ஜூன் மாதம் 9 புள்ளி ஒன்று ஒன்பது டிஎம்சி தண்ணீர் ஜூன் 12ஆம் தேதி முதல் திறக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை தொடருமேயானால் அந்த தண்ணீர் முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. தற்போது அணைகளில் உள்ள 13 புள்ளி ஐந்து ஆறு டிஎம்சி தண்ணீரில், டெட் ஸ்டோரேஜ் என்றழைக்கப்படும் அணையில் இருந்து நீரை வெளியேற்றி பயன்படுத்த முடியாத நீரின் அளவு மட்டுமே கிட்டத்தட்ட 4 டிஎம்சி. இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது அணையில் இருந்து வெளியேற்ற ஏதுவாக உள்ள நீரின் அளவு சுமார் 9 டிஎம்சி மட்டுமே இருக்கும். இந்த 9 டிஎம்சி தண்ணீரில் விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால் தமிழகத்திற்கு நான்கு முதல் ஐந்து டிஎம்சி தண்ணீர் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், பருவமழை தொடங்குவதில் தாமதம் என்பதால் அணைகளுக்கு நீர்வரத்து வந்தால் மட்டுமே தங்களால் ஆணையம் கூறியுள்ள தண்ணீரை திறக்க முடியும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமானால் ஜூலை மாதம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

Next Story

மேலும் செய்திகள்