"டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை" - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்களை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பணியிடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, கோவையை சேர்ந்த இரு தலைமை ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விதிமுறைகளுக்கு எதிராக அரசு ஆசிரியர்கள் லாபத்திற்காக, தனியாக டியூசன் எடுப்பதை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி கூறினார்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு கெடு விதித்தார். இந்த தொலைபேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என்றும், புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு தொடர்ந்த தலைமை ஆசிரியர்கள் ரெங்கநாதன், மல்லிகா ஆகிய இருவரும் அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில், 50 மரக்கன்றுகளை நடுமாறு  உத்தரவிட்ட நீதிபதி, மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகர ஆணையர் அறிக்கை அளிக்கவும் ஆணையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்