'சின்னதம்பி' காட்டு யானையின் பயணம்...

பயணங்கள் முடிவதில்லை என்பது போல் காட்டு யானை சின்னத்தம்பியின் பயணமும் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.
x
தண்ணீர், உணவு தேடி யானைகள் ஊருக்குள் வருவதும், அதை விரட்டுவதும் தொடர்கதை. கோவை அடுத்த கணுவாய், தடாகம், பன்னிமடை, வரப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 2 காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கேயே அவை சுற்றி சுற்றி வந்ததால் கிராம மக்கள் அந்த காட்டு யானைகளுக்கு விநாயகன், சின்னதம்பி என பெயரிட்டனர். 2 காட்டு யானைகளை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி விநாயகன் என்ற காட்டு யானை அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே பிடிபட்டது.

பின்னர் விநாயகன் காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் விடப்பட்டது. அது தற்போது கர்நாடக மாநிலம் பந்தலூர் வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி விநாயகன் யானை பிடிபட்ட இடத்தின் அருகில் சின்னதம்பி யானை வந்தது. அங்கு வைத்து சின்னத்தம்பியை பிடிக்க முடிவு வனத்துறையினர் முடிவு செய்தனர். சின்னதம்பி யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப் பட்டது. இதனால் அந்த யானை எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றது. அதனுடன் ஒரு பெண் யானை மற்றும் குட்டி இருந்தன. அந்த யானைகள் வனத்துறையினரை அருகில் விடவில்லை. சுமார்1 மணி நேரம் போராடியும் அந்த யானை, மற்றும் குட்டியை அங்கிருந்து துரத்த முடியவில்லை.

இதையடுத்து கும்கிகள் மூலம் அந்த யானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன. கும்கி யானைகள் விஜய், பொம்மன் ஆகியவற்றின் உதவியுடன் சின்னதம்பி யானை லாரியில் ஏற்றப்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு பகுதியில் சின்னத்தம்பி விடப்பட்டது. வனப்பகுதியில் விடப்பட்ட 4 நாட்களில் சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி, கோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் சின்னத்தம்பி யானை உலா வந்தது.

பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சின்னத்தம்பி கடந்த வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையம், தீபாளப்பட்டி பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்து மையவாடி என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள பகுதிக்கு நேற்று வந்தது, சின்னத்தம்பி. தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்