கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
x
தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். அமைச்சரின் குற்றசாட்டின் அடிப்படையில், கலப்பட பால் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி திலீப் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்னர்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணைக்கு ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் ஆஜராகியிருப்பதாக பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார். கலப்பட பாலை விற்ற 23 பேரிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, அரசின் அறிக்கை அரைகுறையாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கலப்பட பால் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையை வரும் 21-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். கலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்