தர்மபுரி பேருந்து எரிப்பு : 3 பேர் விடுதலை - ஆளுநர் மாளிகை விளக்கம்

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தர்மபுரி பேருந்து எரிப்பு : 3 பேர் விடுதலை - ஆளுநர் மாளிகை விளக்கம்
x
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பரிந்துரையின்படி, ஆயிரத்து 627 ஆயுள் தண்டனை கைதிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதிகள் மூவரையும் விடுவிக்கும் பரிந்துரையை, மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு, ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.எனினும், மூவரையும் விடுவிக்க வேண்டும் என கடந்த 25-ம் தேதி, ஆளுநருக்கு மீண்டும் அரசு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு குறித்து கடந்த 31-ம் தேதி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தலைமை வழக்கறிஞர் ஆகியோர் ஆளுநரிடம் நேரில் விளக்கம் அளித்ததாகவும்,மூவருக்கும் கொலை செய்யும் நோக்கமில்லை என்றும், கும்பல் மனநிலையில் அவ்வாறு செய்துவிட்டதாக சுட்டிக்காட்டியதாகவும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிறகு, தலைமை வழக்கறிஞரின் சட்டரீதியான கருத்தை ஆளுநர் கேட்டதாகவும்,பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் மூவரும் செய்த நடவடிக்கையால் மரணங்கள் ஏற்பட்டதாகவும், திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல என இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் மூவரும் பொருந்துவார்கள் என கருதுவதாகவும், அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மற்றும் சட்டத்துறை செயலாளர் அடங்கிய மூவர் குழு ஏற்றதாகவும், அதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பின்னர், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.மூவரும் சிறையில் 13 ஆண்டுகளை கழித்துவிட்டார்கள் என்பதாலும், கும்பல் மனநிலையில் குற்றத்தைச் செய்தார்கள் என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பதாலும், இவர்களை முன்கூட்டியே விடுவிக்கும் உத்தரவை பிறப்பித்ததாகவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்