தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் கோவில்பட்டி கடலைமிட்டாய்

தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளதால் கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு  தயாராகும் கோவில்பட்டி கடலைமிட்டாய்
x
தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான இனிப்பு வகைகளை மற்றவர்களுக்கு  கொடுத்து மகிழ்வது மக்களின் வழக்கம். அந்த வரிசையில் தீபாவளி பண்டிகையன்று கொடுப்பதற்காக கோவில்பட்டியின் சிறப்புகளில் ஒன்றான கடலை மிட்டாய் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தித்திக்கும் வெல்லப்பாகில் மொறு மொறு கடலையை போட்டு வில்லைகளாக வெட்டிக் கொடுக்கப்படும் கடலை மிட்டாயின் பெருமை, இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் பிரசித்தம் என்பதால் இதற்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. 

எத்தனையோ ஊர்களில் கடலை மிட்டாய்கள் தயாரிக்கப்படும் நிலையில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மட்டும் சிறப்பு இருக்க காரணம் இங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலை தான் காரணம் என்கின்றனர் தொழிலாளர்கள். கரிசல் பூமியான கோவில்பட்டியில் விளைவிக்கப்படும் கடலையில் எண்ணெய் சத்து அதிகமாக இருக்கும் என்பதால் இங்கு விளையும் கடலை இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கிறது. 

வெல்லத்தை நன்கு அடர்த்தியான பாகாக உருக்கி அதில் கடலையை கொட்டி சரியான பதத்தில் கிண்டி எடுத்து கடலை மிட்டாய்களாக தயாரிப்பது கைவந்த கலை தான்.. அதனை கோவில்பட்டியில் சரியான அளவில் தயாரிப்பதே அதன் ருசி உலகெங்கும் பரவி இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. குடிசைத் தொழிலாக உள்ள இந்த கடலை மிட்டாய் தயாரிப்பில் மட்டும் கோவில்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


 சரியான பக்குவத்தில் செய்யப்பட்ட இந்த கடலைமிட்டாய்கள் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் என்பதால் இதனை வாங்க வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பதற்காக இந்த கடலை மிட்டாய்களை ஏராளமானோர் ஆர்டர் கொடுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக இங்கு தரமான முறையில் பேக்கிங் செய்யப்படுவதும் சிறப்பாகவே இருக்கிறது. ஊரின் பெருமையை பறைசாற்றும் இந்த கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தால் கூடுதல் அங்கீகாரமாக இருக்கும் என்பதும் தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்