ஆணழகன் போட்டிகளில் அசத்தும் 58 வயது நபர்

60 வயதை நெருங்கிவிட்ட போதிலும் ஆணழகன் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து சாதிக்கும், தன்னம்பிக்கை மனிதர்
ஆணழகன் போட்டிகளில் அசத்தும் 58 வயது நபர்
x
சாதனை படைப்பதற்கு வயது தடையில்லை எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் சேலத்தை சேர்ந்த ஹனீபா.

சேலம் முகமது புறா பகுதியை சேர்ந்த இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சிறுவதில் இருந்தே உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொண்டுள்ள இவர், ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் Mr.சேலம் பட்டம் வென்றார். அதனை தொடர்ந்து  85 ல் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு Mr.சென்னை பட்டம் வென்றார்.

இதனையடுத்து, திடீரென உடல் நலம் குன்றியதால், உடலில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், உடலை வருத்தி கடுமையான பயிற்சிகளை செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் கூறி விட்டதால், அவரது கனவு தகர்ந்தது. ஆனாலும், மனம்தளராமல் தொடர்ந்து பயிற்சி செய்த அவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு, தனது 53-வது வயதில், மீண்டும் சாதனை பயணத்தை தொடங்கினார்.

கடந்த 2014, 2015 ஆம் ஆண்டுகளில் Mr.சேலம், Mr. தமிழ்நாடு பட்டங்களை வென்றார். கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மீண்டும் Mr. தமிழ்நாடு பட்டத்தை சூடினார்.


கடந்த மே மாதம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு, Mr.சௌத் இந்தியா பட்டத்திற்கான 4-வது இடம் பிடித்தார்.

கடந்த 7-ம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு 2018-ம் ஆண்டிற்கான Mr.இந்தியா பட்டமும் வென்றார்.

சர்வதேச அளவிலான ஒலிம்பியா போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வெல்வதையே லட்சிமாக கொண்டுள்ள ஹனிபா, வரும்  2019 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற உள்ள போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

60 வயதை நெருங்கிவிட்டபோதிலும், மனம் தளராமல் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தான் பங்கேற்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிவரும் ஹனிபா, அரசின் உதவியை எதிர் நோக்கி காத்திருக்கிறார்.





Next Story

மேலும் செய்திகள்