சிறைகளில் மருத்துவ வசதி - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு...

தமிழகம், புதுச்சேரி சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள், சுகாதார திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் மருத்துவ வசதி - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு...
x
சிறைகளில் மரணமடையும் கைதிகளின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக, அனைத்து உயர்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறைகளில், கைதிகள் மரணமடைந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2012 முதல் 2015 வரை, தமிழகத்தில்  134 கைதிகள் மரணமடைந்ததாகவும், இவர்களில் 109 பேர் வயோதிகம் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்ததால் இறந்து விட்டதாகவும் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. வயோதிகத்தால் இறந்ததாக கூறப்பட்ட 109 பேரும் சிறைக்குள் இறந்தார்களா அல்லது வெளியில் இறந்தார்களா என்ற விவரம் இல்லை என்றும், சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த எந்த விவரமும் அறிக்கையில் இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் வைகையை நியமித்து  உத்தரவிட்டனர். சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய  மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்