108 திவ்ய தேசங்களில் சிறப்பிடம் பெற்ற திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்

108 திவ்ய தேசங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் மங்களாசனம் பாடல் பெற்ற தலமான திருவயிந்திபுரத்தின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
108 திவ்ய தேசங்களில் சிறப்பிடம் பெற்ற திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
x
கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் இருக்கிறது திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்..  கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் கருணையின் உருவமாக காட்சி தருகிறார் தேவநாதப் பெருமாள்.. அவருடன் சாந்த சொரூபிணியாக வைகுண்டநாயகி அருள்பாலிக்கிறார்... 

ஆழ்வார்களில் சிறப்பிடம் பெற்ற திருமங்கையாழ்வாரால் மங்களாசனம் பாடல் பெற்ற தலம் இது என்பது கோயிலின் சிறப்பு.. பல்லவர் மற்றும் சோழர் காலத்துக்கு முந்தைய கோயில் என்பதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்... 

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு சென்ற போது அதில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் இங்குள்ள மருந்து மலையாக உருவெடுத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலையில் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவருக்கு தனி சன்னிதி உள்ளது. கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள் இங்கு வந்து ஹயக்ரீவரை வணங்கிச் செல்கின்றனர். 

தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாயும் கெடிலம் ஆற்றின் கரையில் இந்த கோயில் அமைந்திருப்பது காசிக்கு இணையான சிறப்பாக பக்தர்களால் கருதப்படுகிறது. அதனால் இந்த ஆற்றில் நீராடினால் அனைத்து நன்மைகளும் என பக்தர்கள் நம்புகிறார்கள்..

108 வைணவத் தலங்களில் 42வது இடம் பெற்ற இத்தலம் நடுநாட்டு திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றது.. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம் இது என்பதால் இங்கு வந்து வழிபட்டால் ராகு, கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்... 

ஒவ்வொரு முகூர்த்த நாளிலும் இங்கு ஏராளமானோருக்கு திருமணங்கள் நடப்பதும் வழக்கம். கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்பு,மிளகு, பால், வெல்லம் இவற்றை கொட்டினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது.. 

கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இடைப்பட்ட இடத்தில் இத்தலம் உள்ளதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. புரட்டாசி மாதம் மட்டுமின்றி பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படும் அத்தனை விசேஷ நாட்களிலும் அலங்காரநாதனாக காட்சி தருகிறார் தேவநாதர்... 

Next Story

மேலும் செய்திகள்