108 திவ்ய தேசங்களில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலின் சிறப்பு

108 திவ்ய தேசங்களில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலின் சிறப்புகள்
108 திவ்ய தேசங்களில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலின் சிறப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இருக்கிறது ஸ்ரீதலசயன பெருமாள் கோயில். 14ஆம் நூற்றாண்டில் பராங்குச மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் 63ஆம் இடம் பெற்ற சிறப்பு வாய்ந்த கோயில்.

இந்த கோயிலின் மூலவரான தலசயன பெருமாள் சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் காட்சி தருகிறார். அவருடன் நிலமங்கை தாயார் சாந்த சொரூபிணியாக காட்சி தருவதும் இத்தலத்தின் சிறப்பு.

புண்டரீக மகரிஷி முனிவர் பெருமாள் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் அபூர்வ தாமரை மலரை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்க விரும்பினார். ஆனால் கடல் நீருக்கு மத்தியில் இருந்த பெருமாளை சென்றடைவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பெருமாள் கையால் கடல் நீரை அள்ளி தண்ணீரை வற்றச் செய்து படுத்த நிலையில் முனிவருக்கு காட்சி தந்த தலம் இது என்கிறது கோயில் வரலாறு. கடலுக்கு நடுவே படுத்த நிலையில் பெருமாள் காட்சி  தந்த தலம் இது என்பதால் மாசி மகத்தன்று இங்குள்ள கடலில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வருடந்தோறும் மாசிமகத்தன்று கருடசேவையில் கடற்கரையில் பெருமாள் காட்சி தருவது பேரழகு. சித்திரை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவும் கோயிலின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூறும் நிகழ்வாக அமைகிறது. இங்குள்ள புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் இது. இந்த கோயிலுக்குள் நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்த கோயிலில் வந்து வழிபாடு நடத்தினால் நிலம் தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

மேலும் குழந்தை வரம் வேண்டுவோரும் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை மனமுருக  வேண்டிச் செல்கின்றனர். கோயிலின் சுவர்களில் கண்கவர் வண்ணங்களில் சிற்பங்கள் பக்தர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் மையப்பகுதியில் உள்ள இந்த கோயில் கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெருமாளையும் தரிசித்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்