50 ஆண்டுகள் பெருமை வாய்ந்த குரங்குச்சாவடி சந்தை

சேலத்தில் 50 ஆண்டுகளை கடந்து செயல்படும் குரங்குச்சாவடி சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
50 ஆண்டுகள் பெருமை வாய்ந்த குரங்குச்சாவடி சந்தை
x
சேலத்தின் பெருமைகளில் ஒன்றாக இருக்கிறது குரங்குச்சாவடி சந்தை... வாரத்தில் 2 நாட்கள் செயல்படும் சந்தை என்பதும் இதன் சிறப்பம்சம்.. காரணம் அந்தந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருட்களை உடனே கொண்டு வந்து மக்களுக்கு தர வேண்டும் என்பதை நோக்கமாக  கொண்டு தொடங்கப்பட்ட இந்த சந்தை இன்று ஏகோபித்த வரவேற்போடு திறம்பட இயங்கி வருகிறது. 

50 ஆண்டுகளை கடந்து செயல்படும் இந்த சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருட்களான தக்காளி, வெங்காயம், காய்கறிகள் எல்லாம் இங்கு ப்ரெஷ் ஆக கிடைக்கிறது. 

இந்த பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி அதிகம் என்பதால் கடலைகளை மொத்தமாக மூட்டைகளில் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்... 

கீரைகளை பொறுத்தவரை பொன்னாங்கண்ணி, முருங்கை, அகத்திக்கீரை இவைகளையும் தாண்டி பல்வேறு மருத்துவ குணம் கொண்ட கீரைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி முட்டைக் கோஸ், வெள்ளைப்பூண்டு, கேரட், பீட்ரூட் போன்ற மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு தேவைப்படும் மிளகாய் தூய், மசாலா பொருட்கள், சீரகம், மிளகு போன்ற பொருட்களும் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. 

மளிகை சாமான்கள், தேங்காய், வடகம், சிறுதானியங்கள், வாழை இலை, வெற்றிலை என எல்லாமே இங்கு கிடைப்பது இந்த சந்தையின் சிறப்பு என்கிறார்கள் வியாபாரிகள்.. மொத்தத்தில் ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் இந்த சந்தைக்கு வந்தால் வாங்கிச் செல்லலாம்... 

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இந்த குரங்குச்சாவடி சந்தை பெரும் வரப்பிரசாதம் தான்.. ஞாயிற்று கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தையானது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை திருவிழா போலவே நடக்கிறது..

செயற்கை உரங்கள் தெளிக்காத காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் இந்த சந்தைக்கு தேடி வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு... 

குரங்குச்சாவடியில் நடக்கும் இந்த சந்தையை தேடி பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகிறார்கள்... ஒரு ஏக்கர் பரப்பளவில் நடக்கும் இந்த சந்தையில் பல கோடி ரூபாய் வணிகமும் நடக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்