ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எத்தனை மருத்துவ குறிப்புகள் அனுப்பப்பட்டது? - ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி.
x

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஆளுநர் மாளிகை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடிதங்களை அனுப்பியுள்ளது. 


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் ராஜ்பவனுக்கு வந்தது என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டிருப்பின் பொறுப்பு ஆளுநர் என்பதால் அவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதா ? எனவும், அவரிடம் இருந்து பதில் வந்ததா? எனவும் கேட்கப்பட்டுள்ளது. 


மருத்துவமனையில் ஆளுநர் முதலமைச்சரை பார்த்துவிட்டு சென்ற பிறகு, ராஜ்பவனில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா ? எனவும், முதலமைச்சரின் உடல்நிலை, மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ,  எய்ம்ஸ் மற்றும் ராஜ்பவனிடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா ? எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 


அப்படி ஏதேனும் கடிதம் பெறப்பட்டிருந்தால் அது குறித்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா ? என்றும் இந்த விசாரணை குறித்து உங்கள் தரப்பு விளக்கங்களையும் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தலைமையிலான 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததா ? என கேள்வி எழுப்பியுள்ளது 


ஒருவேளை அவர்கள் அறிக்கை வழங்காமல் இருந்திருந்தால்,  அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை, அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பியதா ? எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 


முன்னாள் தலைமை செயலாளர், ஜெயலலிதா உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, இந்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ அறிக்கை அளித்தாரா ? எனவும் கடிதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. 


ஆனால் சிசிடிவி சர்வரில் ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே பதிவுகளை சேமிக்க முடியும் என்றும், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட பதிவுகள் இல்லை எனவும் அப்பல்லோ தரப்பில் அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


இருந்த போதிலும் சிசிடிவி காட்சிகள் வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளதால் வரும் 25ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக உள்ள அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனிடம் சிசிடிவி பதிவுகள் தொடர்பான விளக்கங்கள் கேட்கப்படலாம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்