97 அடியை எட்டியது பில்லூர் அணை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
97 அடியை எட்டியது பில்லூர் அணை
x
பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி மற்றும் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 93 அடியில் இருந்து 97 அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து  மாலை 4 மணி முதல் அணையின் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீரும், மின் உற்பத்தி செய்வதன் மூலம் 6 ஆயிரம் கனஅடி என, வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் என பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் புனிதா கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்