ஆடு புலியாட்டம் ஆடிய ஆஸி.ஆட்டம் கண்டு போன `RSA'..நொடியில் சிதைந்த உலகக்கோப்பை கனவு | SA vs AUS

x

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை மேகங்கள் சூழ நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

முழுமையாக உடற்தகுதியை எட்டாமல் அதை பெருமையாகக் கூறியபடி களமிறங்கிய பவுமா, ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆகி, பொறுப்பற்ற முறையில் வழக்கம்போல் வெளியேறினார்.

டிகாக் 3 ரன்களுக்கும், மார்க்ரம் 10 ரன்களுக்கும், டுசன் 6 ரன்களுக்கும் ஆஸ்திரேலிய அதிவேகங்களிடம் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா நாக்-அவுட்டில் வழக்கம்போல் திணறியது.

நிதானமாக ஆடிய கிளாசென்-மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது. ஹெட் ஓவரில் 47 ரன்களில் கிளாசென் ஆட்டமிழக்க, அடுத்து வந்த யான்சென் கோல்டன் டக் ஆனதால் தென் ஆப்பிரிக்கா மீண்டும் சறுக்கியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனியொருவராகப் போராடிய மில்லர் சதம் விளாசி தென் ஆப்பிரிக்காவை டீசன்ட்டான ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.

101 ரன்களில் மில்லர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து 213 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்-ஹெட் தொடக்க ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது.

29 ரன்களில் மார்க்ரம் ஓவரில் வார்னர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் டக்-அவுட் ஆனார். மறுமுனையில் 62 ரன்கள் அடித்து கேசவ் மகராஜிடம் ஹெட் போல்டானார்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, ஷம்ஷியும் கேசவ் மகராஜும் மிரட்டினர். இருமுனைத் தாக்குதலால் லபுஷேனும் மேக்ஸ்வெல்லும் வெளியேற ஆஸ்திரேலியாவும் தடுமாறியது.

ஆடுகளத்தின் தன்மையை அறிந்து ஸ்மித்-இங்லிஸ் ஜோடி நிதானமாக ஆட, தென் ஆப்பிரிக்க வீரர்கள் கேட்ச்சுகளைத் தவறவிட்டது, ஆஸ்திரேலியாவிற்கு பெரும் சாதகமானது. தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவும் ஓவர் ரொடேஷனில் தடுமாறி, அழுத்தம் அளிக்கத் தவறினார்.

ஒரு கட்டத்தில் ஸ்மித் 30 ரன்களிலும் இங்லிஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

எனினும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டதால் இலக்கை ஆஸ்திரேலியா நெருங்கியது. 8வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்-ஸ்டார்க் ஜோடி நிதானமாக ஆட, 48வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, போராடி வெற்றி பெற்றது.

நாக்-அவுட் போட்டியில் வழக்கம்போல் பதற்றம் அடைந்து வெற்றியை தென் ஆப்பிரிக்கா பறிகொடுத்துள்ள நிலையில், 8வது முறையாக இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது ஆஸ்திரேலியா....


Next Story

மேலும் செய்திகள்