சொந்த மண்ணில் எடுபடாத வியூகம்..மும்பை ஹாட்ரிக் தோல்வி - முதல் இடத்தை பெற்ற ராஜஸ்தான்

x

ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மும்பை தடுமாறியது. போல்ட் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மாவும், நமன்தீரும் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக் ஆகினர். 3வது ஓவரில் டெவால்ட் ப்ரீவிஸூம் போல்ட்டிடம் கோல்டன் டக் ஆக, தொடக்க வீரர் இஷான் கிஷான் 16 ரன்களில் பர்கரிடம் ஆட்டமிழந்தார்.

சற்று நேரம் தாக்குப் பிடித்த மும்பை கேப்டன் பாண்டியா 34 ரன்களும் திலக் வர்மா 32 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்ட மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

மிரட்டலாக பந்துவீசிய ராஜஸ்தான் பவுலர் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கடும் நெருக்கடி அளித்த சஹால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.தொடர்ந்து 126 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் விரைவில் ஆட்டமிழந்தனர்.அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். அஸ்வின் 16 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் 16வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை ருசித்ததுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வீழ்த்தப்பட்டு மும்பை ஹாட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்