பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி

பாகிஸ்தான் உடனான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
பாகிஸ்தான்-நியூசிலாந்து தொடர் ரத்து - கடைசி நேரத்தில் நியூசிலாந்து அதிரடி
x
3 ஒருநாள் போட்டிகள், ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றது.

கடந்த 2002 ஆம் ஆண்டு கராச்சியில் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வெடிகுண்டு வெடித்ததை அடுத்து, நியூசிலாந்து கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது. பின்னர் 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தாலும், 18 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை.

தற்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணி அங்கு சென்றது, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.  இந்நிலையில் ராவல்பிண்டியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவிருந்த கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்வதாகவும், அணி நாடு திரும்புவதாகவும் அறிவித்துள்ளது.

நியூசிலாந்தின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும், முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சி மற்றும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

போட்டியை ரத்து செய்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் பயனளிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியத்துவம் என நியூசிலாந்து அணி திட்டவட்டமாக கூறிவிட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தன்னிச்சையாக முடிவை எடுத்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ராமிஸ் ராஜா, விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கொண்டுச் செல்வோம் எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர், நியூசிலாந்து பாகிஸ்தானின் கிரிக்கெட்டை கொன்றுவிட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

இவ்வாறு பாகிஸ்தானில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அடுத்த மாதம் பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து என்ன முடிவு எடுக்கும் என்ற சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிக்கியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்