சென்னையில் நாளை 'தமிழ்நாடு நாள் விழா': முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னையில் நாளை 'தமிழ்நாடு நாள் விழா': முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா வரும் 18 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, உரையாற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகின்றது. முன்னதாக, இவ்விழாவில் காலை 9.00 மணியளவில் மாநிலத் திட்டக் குழு. துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெறும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இலக்கிய மாமணி, தமிழ்த் தென்றல் திரு.வி.க., கபிலர் என்பது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.