டெல்லி நிர்வாக சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு... 'இந்தியா' கூட்டணியின் மாஸ்டர் பிளான் - எம்.பி.க்களுக்கு பறந்த கொறடா உத்தரவு
டெல்லியில் அதிகாரிகள் நியமனத்திற்கு துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு டெல்லி நிர்வாக சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. மசோதாவை மாநிலங்களையில் அடுத்த வாரம் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் வியூகம் வகுத்து வருகிறது. பாஜக கூட்டணிக்கு 100 எம்.பி.க்கள் உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு 109 எம்.பி.க்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், கபில்சிபல் போன்ற ஓரிரு சுயேச்சைகள் ஆதரவு கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் அனைத்து எம்.பி.க்களும் மாநிலங்களவையில் ஆஜராக வேண்டும் என காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுபோல் 90 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிபுசோரன் உள்ளிட்ட எம்.பி.க்கள் வருகையை உறுதி செய்யவும், உடல்நலம் சரியில்லாத எம்.பி.க்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியையும் எதிர்க்கட்சிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.