காஞ்சிபுரம் மக்கள் ஓட்டு யாருக்கு? களத்தில் இறங்கிய தந்தி டிவி...கிடைத்த ரிசல்ட்

x

2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்ட... யாருக்கு ஓட்டுப்போடலாம் என மக்கள் யோசிக்க... இன்றையை உங்கள் தொகுதி உண்மை நிலவரம் பகுதியில் காஞ்சிபுரம் தொகுதி நிலவரம் என்ன...? என்பதை விரிவாக காணலாம்...

காஞ்சிபுரம்... எங்கும் புராதன கோயில்கள் நிறைந்த ஆயிரம் கோயில்களின் நகரம்...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோவில், குமரக்கோட்டம் முருகன் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம்.. பல்லவர் ஆட்சியில் தலைநகராக இருந்த காஞ்சிபுரம், உலக பிரசித்தி பெற்ற பட்டுசேலைகள் உற்பத்தி செய்யும் பட்டு நகரமும் கூட...

உலகம் தேர்தலை பார்த்திராத போது மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இங்கிருந்ததை காட்டுகிறது உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டுக்கள்.

மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, ஆலம்பரக்கோட்டை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என பல சுற்றுலா தலங்களை கொண்ட தொகுதி. ஏரிகளால் விவசாயம் செழிக்க... நெசவும் மக்கள் வாழ்வாதாரமாக இருக்கிறது.

சென்னைக்கு அருகில் உள்ள தொகுதியில், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 8,46,016 ஆண் வாக்காளர்கள், 8,86,636 பெண் வாக்காளர்கள், 294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 17,32,946 வாக்காளர்கள் உள்ளனர்.

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரில்... தேர்தல் வரலாற்றை பார்க்கையில் திமுகவும், அதிமுகவும் பலத்தை காட்டும் தொகுதியாகவே இருக்கிறது.

1951 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் காமன்வீல் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி வென்றார். பிறகு செங்கல்பட்டு தொகுதியாக மாறியது. 1957 தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஏ கிருஷ்ணசாமி வென்று எம்.பி. ஆனார். இந்தியக் குடியரசுக் கட்சியை சேர்ந்த சிவராஜும் எம்.பி. ஆனார். 1962 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த ஓ.வி. அழகேசன், 1967, 1971 தேர்தல்களில் திமுகவின் சிட்டிபாபு, 1977 தேர்தலில் அதிமுக மோகனரங்கம் வென்றனர்.

1980 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த ரா அன்பரசு, 1984 தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ஜெகத்ரட்சகன், 1989 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த காஞ்சி பன்னீர்செல்வம், 1991 தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ராஜேந்திர குமார் வென்றனர். 1996 தேர்தலில் திமுகவை சேர்ந்த கே. பரசுராமன், 1998 தேர்தலில் அதிமுக சார்பில் காஞ்சி பன்னீர்செல்வம், 1999, 2004 தேர்தல்களில் பாமகவின் ஏகே மூர்த்தி வென்றனர். 2008 தொகுதி மறு சீரமைப்பில் மீண்டும் காஞ்சிபுரம் தொகுதி உருவானது. 2009 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த விஸ்வநாதன், 2014 தேர்தலில் அதிமுகவின் மரகதம் குமரவேல் வென்றனர். 2019 தேர்தலில் தொகுதியை வசமாக்கினார் திமுகவின் ஜி. செல்வம்.

தேர்தலில் 6,84,004 வாக்குகளை பெற்றார் ஜி. செல்வம். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மரகதம் 3,97,372 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் முனுசாமி 55,213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியிருந்தார் ஜி. செல்வம்.

2019 தேர்தல் பிரசாரத்தில்... பட்டு மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய நடவடிக்கை, காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா அமைப்பது துரிதப்படுத்தப்படும், பாலாற்று குறுக்கே தடுப்பணைகளை கட்ட முயற்சி, நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்... காஞ்சிபுரம்- செங்கல்பட்டு - சென்னைக்கு அதிக ரயில்கள் இயக்க நடவடிக்கை, காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னைக்கு ரயில் பாதை அமைக்க நடவடிக்கை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை, கால்வாய்கள், நீர்நிலைகள் தூர்வாரப்படும் என வாக்குறுதிகளை அளித்திருந்தார் ஜி.செல்வம்.

எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்றதும் தொகுதி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் ஜி. செல்வம். நெசவு மூலப்பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் குரல் எழுப்பியிருக்கிறார். காஞ்சிபுரம் ரயில்வே மேல்பால பணிகள் நிறைவடைந்துள்ளது. பட்டு பூங்கா பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

2024 தேர்தல் நெருங்கும் வேளையில்... தொகுதி கள நிலவரம் குறித்து அறிய சென்ற போது பல்வேறு கோரிக்கைகளை அடுக்கினர் காஞ்சிபுரம் வாக்காளர்கள்.


Next Story

மேலும் செய்திகள்