எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் மரணம்

x

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த சிவகங்கை ராணுவ வீரர் மரணமடைந்த நிலையில், அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிரங்காலைச் சேர்ந்த ஜெகவீர பாண்டியனுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ராணுவத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஜெக வீரபாண்டியன் ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு எதிர்பாராத விதமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை ஜெக வீரபாண்டியனின் சொந்த கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், ராணுவ வீரர்கள், காரைக்குடி ரெஜிமென்ட் வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தாய் நாட்டிற்காக 19 வயதிலேயே ராணுவத்தில் இணைந்த ஜெகவீரபாண்டியன், கார்கில் போர், 2001-2002ல் பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்