இன்னும் 10 ஆண்டுகளில் 6 ஜி சேவை..பிரதமர் மோடி புதிய தகவல்
இன்னும் 10 ஆண்டுகளில், 6ஜி தொழில்நுட்ப சேவையை இந்தியா நடைமுறைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இளைஞர்கள் மத்தியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உணர்வை மேம்படுத்தும் முயற்சியாக, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியை மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சுமார் 29 ஆயித்து 600 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, காணொலி முறையில் பங்கேற்று, போட்டிகளில் கலந்து கொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் உரையாற்றினார், அப்போது அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கண்ட பசுமை புரட்சியால், தற்போது அந்தத் துறையில் நம் நாடு தன்னிறைவு அடைந்திருப்பதாகக் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது விண்வெளிப் புரட்சி, சுகாதாரப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளால் சம்பந்தப்பட்ட துறைகள் முன்னேறி வருவதாகக் கூறினார்.
இந்திய இளைஞர்கள், இந்தியாவுக்காக மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடுகளுக்காகவும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாகவே இந்தியாவில் 6 ஜி தொழில்நுட்ப சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.