தோல்வியிலும் துவளாத "நாம் தமிழர்"- பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடம்...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் சீமானும் சாதித்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
தோல்வியிலும் துவளாத நாம் தமிழர்- பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடம்...
x
யாருடனும் கூட்டணி இல்லை... இளைஞர்களே எங்களின் பலம்... 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி... இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் தில்லாக களமிறங்கும் சீமான், இந்த தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
மான்டேஜ்ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தபோதே அவர்களை எதிர்த்து தனது நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் சீமான். அவர் முதன்முதலாக தேர்தல் களம் கண்டது 2016 சட்டமன்ற தேர்தலில்தான். அந்த முதல் தேர்தலிலேயே கெளரவமான வாக்கு சதவீதத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.07% வாக்கு சதவீதத்தை காட்டியது.2016 தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் வாக்கு வித்தியாசம் ஆயிரம் ஓட்டுகளுக்கும் கீழே இருந்தது. ஆக, இந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பறித்தது சீமான் தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள். 2016 தேர்தலுக்கு பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி.2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுகவுக்கு அடுத்ததாக நான்காவது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி, 3.89 சதவீத வாக்குகளை பெற்றது. 2019-இல் நடந்த 22  சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளை இக்கட்சி பெற்றது. அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியதால் இந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெரும் நம்பிக்கையோடு களமிறங்கினார்கள். 
வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட சீமான், 234 தொகுதிகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தத் தேர்தலிலாவது வெற்றிக் கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு இப்போதும் நிறைவேறவில்லை. ஆனால், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 6 சதவீதத்தை தொட்டிருக்கிறது.அதிமுக - திமுக வுக்கு மாற்று நாங்கள்தான் என்று மேடை தோறும் முழங்கும் சீமான், அந்தப் பயணத்தில் ஏறுமுகமாக இருப்பதையே இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது. ஏறுமுகம் வெற்றிமுகமாக மாறுமா என்பதே சீமான் ஆதரவாளர்களின் கேள்வி.


Next Story

மேலும் செய்திகள்