ரஜினி மக்கள் மன்றம் - புதிய விதிகள் உருவாக்கம்...

குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உறுதிபட அறிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் - புதிய விதிகள் உருவாக்கம்...
x
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்திற்காக, தனி விதிகளை உருவாக்கி அதனை புத்தகமாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால், அந்த குடும்பத்தில் யாருக்கும் கட்சி பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. சாதி, மத சங்கங்கள், அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை என்ற விதியும் புத்தகத்தில், இடம்பெற்றுள்ளது. 

இளைஞரணியில் 35 வயதுக்குட்பட்டவர்களே இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் வாகனங்களில் மன்ற கொடியை நிரந்தரமாக வைக்க கூடாது என்றும் விதிகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கொடியை மன்ற நிகழ்ச்சிகளின் போது வைத்து விட்டு பின்னர் அகற்ற வேண்டும் என்றும் மன்ற பொறுப்புகள், நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது என அந்த புத்தகத்தில் என கூறப்பட்டுள்ளது. மேலும் மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.

முதியவர்கள், பெண்களிடம் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும், மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு விதிகளாக கூறப்பட்டுள்ளது. தீய பழக்கங்களுக்கு, அடிமையாக இருக்கக்கூடாது, மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது என்னும் விதிகளும் இடம்பெற்றுள்ளன.

மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்றும், தனி நபர் விமர்சனம் செய்ய கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது எனவும், தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒரு போதும் திரட்ட கூடாது, என்றும் ரஜினிகாந்த் தமது மன்றத்தினருக்கு விதிகளை பிறப்பித்துள்ளார். 

சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது என்பதும் விதிகளாகும். சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும் என்றும், மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்