தி.மு.க. தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு...

வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க.பொதுக்குழுக்கூட்டத்தில், தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தி.மு.க. தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு...
x
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி மரணமடைந்த நிலையில், வரும் 28ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது அரசியல் வட்டாரங்களில்  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அன்று தான் தி.மு.க.வின் அடுத்த தலைவரும், பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். தி.மு.க.வின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்தியே நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கருணாநிதி மரணமடைந்ததால் தற்போது செயல்தலைவராக இருக்கும் ஸ்டாலின் தலைவராக தேர்வாகிறார், கூடவே அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்த இரண்டு பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பை தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. 27ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 28ஆம் தேதி காலை 9 மணிக்கு தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.   தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரை முருகனும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தி.மு.க. அறிவித்துள்ள தேர்தலில், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத பட்சத்தில், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என, தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது. கூடவே தி.மு.க. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டாலினை தலைவராக வேண்டும் என வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்க திருச்சி மாவட்ட தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்