மோடியின் 'கட்டிப்பிடி' பாணியை பின்பற்றிய ராகுல்

நாடாளுமன்றத்தில் மோடியை ராகுல் கட்டிப்பிடித்தது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...
மோடியின் கட்டிப்பிடி பாணியை பின்பற்றிய ராகுல்
x
பிரதமரானதில் இருந்தே மோடியின் ஒவ்வொரு செயல்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. மோடியின் நடவடிக்கைகளால் குதூகலம் அடைவதில் முன்னணியில் இருப்பது, சமூக வலை தளங்களில் 'மீம்ஸ்' போடுபவர்கள் தான். அதற்கு சமீபத்திய உதாரணம், மோடியின் 'யோகா' வீடியோ. இதுபோல, உலக நாடுகளின் தலைவர்களை சந்திக்கும்போது, கட்டியணைக்கும் மோடியின் வழக்கமும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் டிரம்ப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், சீன அதிபர் ஜி ஜின் பிங், ஜப்பான் பிரதமர் அபே, இஸ்ரேல் அதிபர் ரியுவென் ரிவ்லின், சவுதி மன்னர், கனடா பிரதமர் என மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு ஆளாகாத உலக தலைவர்களே இல்லை என கூறலாம். வெளிநாடுகளுக்கு மோடி பயணம் செல்லும்போதும் சரி, வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போதும் சரி... நிச்சயமாக கட்டியணைப்பது மோடியின் வழக்கம். இதை, சமூக வலை தளத்தில் விமர்சித்திருந்த ராகுல், கட்டிப்பிடி வைத்தியம் பலனளிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். 

அப்போது, அதற்கு பதிலளித்த மோடி, மற்றவர்களை போல பயிற்சி பெற்றிருந்தால் கைகுலுக்கி இருப்பேன் எனவும் கட்டியணைப்பது எனது இயல்பு எனவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான கருத்துகளை தனக்கு சாதகமாக மாற்றுவது தனது இயல்பு எனவும் தெரிவித்தார். இந்நிலையில், மக்களவையில் மோடியை ராகுல் கட்டி தழுவியதால் மீண்டும் 'கட்டிப்பிடி' விவாதம் தொடங்கி விட்டது. காரசாரமாக மோடியை விமர்சித்து விட்டு, அதே வேகத்தில், மோடியின் இருக்கைக்கே சென்று ராகுல் கட்டிப்பிடித்தது, 'கட்டிப்பிடி' இயல்பை கிண்டல் செய்வதாகவே கருதப்படுகிறது. 

மக்களவைக்குள் பிரதமரை  ஒருவர் கட்டிப்பிடிப்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறை. மோடியின் வழக்கத்தை அவருக்கே செய்து காட்டியதோடு, பிரியா வாரியரை போல கண் சிமிட்டியதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் முக்கியமான விவாதத்தின் கவனத்தையே ராகுல் திசை திருப்பி விட்டார். மோடி ஏற்கனவே கூறியபடி, எதிரான கருத்துகளை சாதகமாக்கும் அவரது வித்தை, இந்த விஷயத்திலும் எடுபடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்...

Next Story

மேலும் செய்திகள்