பஜாஜ் பைனான்ஸ் 2 ஸ்கீமில் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அதிரடி தடை.. நீங்களும் கடன் வாங்கிருக்கீங்களா?

x

இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ள

கடன்களின் மொத்த மதிப்பு 2.9 லட்சம் கோடி ரூபாயாக

உள்ளது. ஆன்லைன் மூலம் விரைவாக கடன் மற்றும் கடன்

அட்டைகள் பெறும் திட்டங்களையும் பெரிய அளவில்

செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டா இ.எம்.ஐ (Insta EMI) மற்றும் இ காம் (eCOM) ஆகிய இரண்டு ஆன்லைன் கடன் திட்டங்களின் கீழ் புதிதாக கடன் வழங்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

கடன் பெறுபவர்களில் பலருக்கும் இத்திட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய தகவல் அறிக்கையை வழங்க தவறியதற்காகவும், வழங்கப்பட்டவர்களில் பலருக்கு முழுமையான தகவல் அறிக்கை வழங்கப்பட வில்லை என்றும்...பலரது தகவல் அறிக்கையில் பிழைகளுடன் இருப்பதாகவும் அதனால் தடை விதித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இன்ஸ்டா இ.என்.ஐ திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு கட்டணமின்றி இன்ஸ்டா இ.எம்.ஐ அட்டை வழங்கப் படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் 4,000க்கும் அதிகமான விற்பனையகங்களில், 2 லட்சம் ரூபாய் வரை,கடன்களுக்கு பொருட்களை வாங்க முடியும்.

கடன் தொகையை EMI ரக மாதாந்திர தவணைகளாக திருப்பி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும் இதே முறையில் பொருட்களை வாங்க முடியும்.

eCOM திட்டத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களின் கீழ் இதுவரை சுமார் 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் இவற்றை செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்படும் என்று பஜாஜ் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்