நியூஸ்கிளிக் நிறுவனம்.. சீன பங்களிப்பு? - EDயை தொடர்ந்து என்ட்ரி கொடுத்த சி.பி.ஐ
சீன சாா்புடைய கொள்கையை பரப்புவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் சாா்பில், நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நியூஸ் கிளிக் நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்த், மனிதவளத் துறையின் தலைமை அதிகாரி அமித் சக்கரவர்த்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறியதாக, நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நியூஸ்கிளிக் நிறுவனத்திலும், நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்த்தின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
