கோவா சட்டப்பேரவை தேர்தல்... கெஜ்ரிவால் கோவா பயணம்

நான்கு முனைப் போட்டியை நோக்கி நகரும் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தயாராகி வருகிறார். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
கோவா சட்டப்பேரவை தேர்தல்... கெஜ்ரிவால் கோவா பயணம்
x
கடந்த 2012 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி, 2015 முதல் டெல்லியை ஆட்சி செய்து வருகிறது. 

ஊழலற்ற நிர்வாகம் என்ற கோஷத்துடன் அரசியலில் களமிறங்கிய கெஜ்ரிவால், மாநில அந்தஸ்து இல்லாத டெல்லியை தாண்டி பிற மாநிலங்களில் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுச் செல்ல போராடுகிறார்.  

விரைவில் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இதில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 23.7 % வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி 20 இடங்களை வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. கோவாவில் 6 புள்ளி 3  % பெற்றது. 

தற்போது பஞ்சாப், கோவாவில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என கெஜ்ரிவால் அதிக முனைப்பை காட்டி வருகிறார்.  

கோவாவை பொறுத்தவரையில் ஆட்சியை பிடிக்கும் ரேசில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரசை தவிர்த்து 4 ஆவதாக ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.

கடந்த ஜூன், செப்டம்பர் மாதங்களில் கோவாவிற்கு பயணம் செய்த கெஜ்ரிவால், தாங்கள் வெற்றிப்பெற்றால் டெல்லியை போன்று 300 யூனிட் இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்துவோம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். 

ஆளும் பாஜகவையும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசையும் சரமாரியாக விமர்சனம் செய்தார்.

தற்போது கோவாவில் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், கெஜ்ரிவாலும் அங்கு செல்கிறார். அங்கு ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தும் கெஜ்ரிவால், முழுவீச்சில் பிரசாரத்தை தொடங்குவார் என ஆம் ஆத்மி கட்சி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்