மீண்டும் சூடு பிடிக்கும் மே. வங்க அரசியல் - நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணை

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மம்தா மருமகனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அமலாக்கப்பிரிவும், பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிஐடி போலீசாரும் துரிதப்படுத்தியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் சூடு பிடிக்கும் மே. வங்க அரசியல் - நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணை
x
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்தாலும், முதல்வராக இருக்கு மம்தா பானர்ஜி நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார்.

மாநிலத்தில் எம்.எல்.ஏ. வாக இல்லாமல் முதல்வராகியிருக்கும் மம்தா பானர்ஜி, பதவியை தொடர வேண்டும் என்றால் நவம்பர் 5- ஆம் தேதிக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும்.  

இந்நிலையில், மாநிலத்தில் காலியாக இருக்கும் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு  தொடர்பாக விசாரித்துவரும் அமலாக்கப்பிரிவு, மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரித்துள்ளது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியிருக்கும் அபிஷேக் பானர்ஜி, எந்த விசாரணையையும் சந்திக்க தயார், தான் 10 பைசா சட்டவிரோதமாக பெற்றுள்ளேன் என நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாரென கூறியிருக்கிறார்.

இதற்கிடையே மேற்கு வங்க சிஐடி போலீசார், பாஜகவை சேர்ந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுப்ரதா சக்ரவர்த்தி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக விசாரித்துவரும் மேற்கு வங்க மாநில அமைப்பான சிஐடி போலீசார், அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.  

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத அவர், கொல்கத்தா உயர்நீதிமன்றம் சென்று வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக கூறி கைது செய்ய தடையை பெற்றுள்ளார். 

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முகமைகளின் இந்த நடவடிக்கை அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்